![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWaz1QpAc08WMKD4bVkXK7JrziVKTriGwcUNGBtNwSvGAJvnOKf6X-0dW8TL2EjPi5dd9by7bF67oUvw98s_ftI2n5iafveQpoRBoroGG-LAMwUNyS64XPNVXqXl3sFEQGSC8ULFUxjM/s400/bharathi.gif)
ஆச்சரியம்தான்!
ஒரு கோப்பை மதுவுக்கும்
ஒரு நாள் மாதுவுக்குமாய்
மன்னர்களே மதிமயங்கிய மண்ணில்
எட்டயபுரத்தில் மட்டும்
எப்படி நிகழ்ந்தது - ஓர்
அக்னிக் குஞ்சின் அவதாரம்?
பத்து மாதச் சிறை தந்த
பக்குவமான உயிர் போல்
எரியும் எரிமலையாய்…
தகிக்கும் சூரியனாய்…
நூறாண்டு அடிமைகளின்
நெஞ்சக் கொந்தளிப்புக்
கொஞ்சமும் குறையாமல்
வந்த உருவம் நீ!
சர் பட்டத்திற்கும்
ராய் விருதுக்குமாய்
விதேசிகளிடம் மண்டியிட்ட
சுதேசிகளின் மத்தியில்
தெருவுக்கு வந்த தேசியவாதியே…
பர்தாக்கள் மட்டுமே பவனி வந்த
பறங்கியப் பாரதத்தின்
வேர் தேடி விழுதறுத்த கூர்வாள்-உன்
நேர்கொண்ட நெற்றிச் சுடர்தான்!
இவன் - நம் தேசத்தின் பொக்கிஷம்!
காத்து வைத்திருங்கள் இவனை!
சொன்ன காந்தியால் உன்
காலடிச் சிறப்புப் புரிந்தது!
நீ
எடுத்து வைத்த அடியில் எழும்பிய புழுதி
இந்த மண்ணையே மேடாக்கிய
உண்மை தெரிந்தது!
நீ மதித்த மண் -
உன் மகத்துவம் அறிந்தது!
வெற்று உடம்பாய் உன்னைப் புதைக்காமல்
விதையாய்க் கண்டு விருட்சமாக்கியது
விருட்சங்களுள்ளே வெப்பமூட்டி வீரியமிக்க வீரர்களாக்கியது
நீ தட்டி எழுப்பிய பாரதம்
தலை நிமிர்ந்து பார்த்தபோது
உன்னைக் காணவில்லை!
எங்கே சென்றாய்?
தேடியபோது தெரிந்தது -
இயேசு போலவே நீயும் உயிர்த்தெழுந்து தேசத்தின்
உணர்வாய் ஊடுருவியது!
அன்றும் என்றும்…
இந்தத் தேசத்தின் மறைக்கப்பட்ட திறமைகளின் மனதில்
என்றும் நீ நிற்பாய் -
நெருப்புத் தனலாய்!
அந்தத் தனலே உன் ஆத்மாவாய் அவதரித்து
மண்டியிட்டுக்கூறுகிறோம் -
எங்களை -
மன்னித்துவிடு பாரதி.......................
No comments:
Post a Comment